அப்போது எனக்கு பத்து வயசு இருக்கும். மகாத்மா காந்தியின் பிறந்த
நாளை முன்னிட்டு ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார் காங்கிரஸ்காரர் கண்ணுக்குட்டி
அத்தான். அவருடைய பெயர் கோவிந்தராசு. இருந்தாலும், ஊரில் அவரை கண்ணுக்குட்டி என்றுதான் அழைப்பார்கள்.
எனக்கு காந்தி என்றால் ரொம்ப பிடிக்கும். அவர்தான் நமக்கு சுதந்திரம்
வாங்கி தந்தவர் என்று அவரைப் பற்றி கேள்விப்பட்டிருந்ததால், அவர் மீது பெரிய மரியாதை
உண்டு.
எங்க கிருஷ்ணமூர்த்தி பெரியப்பா வீட்டு வாசலில் அமர்ந்து பார்ப்பது
போல, பெரியாத்தா
வீட்டு வாசலில் மேடை அமைத்து பந்தல் போட்டிருந்தார்கள். மேடையிலும், எதிரே தெருவின் இருபக்கமும் டியூப் லைட் கட்டிக் கொண்டிருந்தார்கள்.
பொழுது எப்போது சாயும், டியூப் லைட் வெளிச்சத்தில் பேச்சாளர்கள் எப்படி
பேசுவார்கள், நாம் எங்கு உட்க்கார்ந்து கேட்கலாம் என்று, மேடைக்கு எதிரே ஒரு இடத்தை பார்த்து, அந்த இடத்தில்
அமர்வது என்று முடிவு செய்துவிட்டு உற்சாகத்துடன்
அங்கிருந்து புறப்பட்டேன்.
மாட்டுக்கு புல் அறுத்து கொண்டு திரும்பிய போது மேடையை பார்த்தேன்.
மேடையை காணவில்லை. எனக்கு பெரிய ஷாக். என்னாச்சு என்று எதிரே வந்த மைனர் பக்கிரிசாமி
அத்தானிடம் கேட்டேன்.
சுமையோடு நின்றபடி இருந்த என்னை பார்த்தவர், பிறகு ‘’காமராசர் இறந்துட்டார் மாப்ளே. அதனால மீட்டிங் கேன்சல் ஆயிட்டு...’’ என்றார்.
எனக்கு அழுகையே வந்துவிட்டது. கல்வி கண் திறந்த காமராசர் இறந்துட்டாரா? என்று.
காமராசர் மீது கண்ணுக்குட்டி அத்தானுக்கு பெரிய மரியாதை உண்டு.
அவரது மகனுக்கு காமராஜ் என்று பெயர் வைத்திருந்தார். அதெல்லாம் ஞாபகத்துக்கு வந்தது.
இப்போதெல்லாம், காந்தி பிறந்த நாள் வரும் போது, காமராசர் இறந்த துக்க
செய்தியும், அந்த கூட்டம் நடைபெறாமல் போன அன்றைய தினமும், கண்ணுக்குட்டி அத்தானும் ஞாபகத்துக்கு வருகிறார்கள்.
No comments:
Post a Comment