பொங்கல் வாழ்த்து படம் |
இன்று தமிழகமெங்கும் பொங்கல்
கொண்டாடப்படுகிறது. தமிழர்கள் எங்கெல்லாம் வாசிக்கிறார்களோ அங்கெல்லாம் பொங்கல்
மனதை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். இது தமிழர்களின் பண்டிகை. தமிழர்களின் பண்பாட்டை
விளக்கும் பண்டிகை. தமிழர்கள் நன்றியை தெரிவிக்க கொண்டாடும் பண்டிகை. இது
உழவர்களின் திருநாள்.
உழவன் என்றாலே கிராமம்தான். விவசாயி, விவசாய கூலி என்று அனைவரும் கொண்டாடும் இந்தப்
பண்டிகையை என் கிராமத்தில் நான் சிறுவயதில் உள்வாங்கிய அந்த அனுபவங்களை உங்களுடன் பகிந்து கொள்வதில்
பெருமைகொள்கிறேன்.
பொங்கல் பண்டிகையை மூன்று நாள் கொண்டாடினாலும், அதற்கு பத்து நாள் முன்பாகவே
தயாராகிவிடுவார்கள். வீட்டை ஒட்டடை அடிப்பது, வெள்ளையடிப்பது என்று சுத்தம் செய்யும்
வேளையில் இறங்குவார்கள். பரணியில் இருக்கும் பொருளெல்லாம் கீழே இறங்கி
சுத்தமாகும்.
பொங்கலுக்கு ஐந்தாம் நாள், மூணாம் நாள், அல்லது முதல் நாள் என்று ஒத்தபடையில் வருகிற
நாளில் இடையூர் கிராமத்துக்கு சென்று புது பானை வாங்குவார்கள். பல ஊர்களில்
இருந்து கூட்டம் கூட்டமாக வந்து பொங்கல் பானையை தட்டிப் பார்த்து வாங்குகிற
காட்சியும்,
பானைகளை குயவர்கள் கட்டி கொடுக்க அதை பெண்களும் ஆண்களும் தூக்கி செல்கிற
காட்சியும் மனதை விட்டு அகலாதவை. அந்த பொங்கபானையை சாமி கும்பிடும் இடத்தில்
ஒன்றின் மீது ஒன்றாக குப்புற பாதுகாப்பாக அடுக்கி வைத்திருப்பது கூட அழகு. பானை, மடக்கு, அகப்பை, பிரிமனை எல்லாமே புதுசாக இருக்கும்.
போகிப் பண்டிகை
பொங்கலுக்கு முதல் நாள் போகிப் பண்டிகை.
அந்நாளில் பழைய குப்பைக்கு செல்ல வேண்டிய பொருட்களையெல்லாம் வாசலில் கொண்டு வந்து
போட்டு எரித்து சாம்பலாக்குவார்கள். தீ வேறு எங்கும் பரவக்கூடாது என்பதற்காக
அருகில் இருந்து கவனிப்பார்கள். எரிந்து முடிந்ததும் தண்ணீர் தெளித்து நெருப்பை
அணைப்பார்கள். தங்கள் மனங்களில் இருக்கும் பழிவாங்கும் எண்ணங்களை, கோப தாபங்களை எல்லாம் பொசுக்கி, ஆறு மாசமோ, மூணு மாசமோ பேசாமல் இருக்கும் பக்கத்து வீட்டு
மனிதர்களிடம் அன்போடு பேசி மகிழ்வார்கள்.
‘’என்ன உங்க வீட்டுக்கு பொங்கல் வந்தச்சா, போகி கொண்டாடியாச்சா....” என்று விசாரித்து
பகையை போக்குவார்கள். இப்படியாக போகி, பழையான கழிதலும் புதியன புகுதலுமாக
மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தும் பண்டிகை இது.
கணபதி பண்டாரம் குறித்து கொடுத்த பொங்கல்
வைக்கும் நேரத்தை தோழர் வடிவேலு பறையடித்து அறிவிப்பார். தெருவில் உள்ள பெண்களும், ஆண்களும் வெளியே வந்து அந்த அறிவிப்பை கவனமாக
கேட்பார்கள். அவர் ஒவ்வொரு தெருவாக சென்று அறிவிப்பார்.
பொங்கல் பண்டிகை
பொங்கல் அன்று காலையில் இருந்தே வெறும்
வயிற்றோடு,
பசித்து இருக்க வேண்டும் என்பார் எனது தந்தை கோபாலகிருஷ்ணன். அதி காலை எழுந்து
வாசலில் சாணி தெளித்து கூட்டி கோலம் போட்டு, வீடு தரை எங்கும் சானத்தால் மொழுகி இருக்க வேண்டும்.
குளித்து முடித்துவிட்டு எனது அம்மா பாப்பாத்தி, அக்கா வைரக்கண்ணு, தங்கை ராஜலட்சுமி ஆகியோர் தயாராக
இருப்பார்கள்.
பொங்கல் வைக்கும் நேரத்துக்கு முன்பு என்னையும், அண்ணன் சண்முக சுந்தரம், தம்பி நமசிவாயம் ஆகியோரை அழைத்து சென்று
குளிக்க வைப்பார் எனது தந்தை. தலை துவட்டி ஈரத்துணியோடு வீட்டுக்கு வருவோம்.
கடவுள் படத்துக்கு கீழே ஒரு செங்கல் மீது பசு சானியால்
உருட்டி வைத்த பிள்ளையார் சாமி முன்பு சூடம் ஏற்றி தீபம் காட்டி வணங்கி, நெற்றியிலும், தோள்பட்டை, மணிக்கட்டு போன்ற இடங்களிலும் விபூதி பட்டை
போட்டு விடுவார் என் தந்தை. வீட்டு திண்ணையின் நடு மையத்தில் கடப்பாரையால் நீளமான, அதே சமயம் வட்டமாக கோடு போடுவார்.
அண்ணனிடம் அப்பா கடப்பாரையை கொடுக்க, அதை வங்கும் அண்ணன் தரையில் அப்பா கோடு போட்ட
இடத்தில் குத்தி குத்தி நெம்புவார். உடைந்து வரும் மண்ணை நான் கைகளால் அள்ளுவேன்.
அந்த மண்ணை வாசலுக்கு கொண்டு சென்று தண்ணீர் ஊற்றி பிசைந்து உருண்டை, உருண்டையாக எடுத்து வருவார் அக்காள்.
மண் தோண்டிய இடத்தில் இரண்டு பொங்க பானைகள்
வைத்து சமைக்கும் அளவுக்கு ‘கோடு அடுப்பாக’ மாறி இருக்கும். இந்தப் பக்கம் மூன்று மண் உருண்டைகள், அந்தப் பக்கம் மூன்று மண் உருண்டைகள், என எதிரதிரேக வைத்து அதன் மீது புதுப் பானைகளை
தூக்கி வைப்பார்.
பானை, புது பானையாக இருந்தாலும் அதை கழுவி, அதற்கும் விபூதி பட்டை போட்டு, காப்பு போன்று வாய் பகுதியில் வட்டமாக மஞ்சள் கொத்தை
கட்டி இருப்பார்கள்.
ஒரு வாரத்துக்கு முன்பே வெட்டி காயப் போட்ட
விறகு கட்டைகளை எடுத்து வந்து அருகில் வைப்பேன் நான். அந்த விரகுகளின் மேல் தோலை, அதாவது பட்டைகளை உரித்து அடுப்பில் வைப்பார்
அப்பா. பிறகு கடவுள் படத்துக்கு முன்பு எரிந்து கொண்டிருந்த சூடனை எடுத்து அந்த பட்டைகள்
மீது வைப்பார். பட்டைகள் தீ பிடித்து எரியும். அப்போது ஒவ்வொரு பானையிலும் ஒரு
டம்பளர் பால் ஊற்றி,
மடக்கு வைத்து மூடுவார்கள்.
சிறிது நேரத்தில் பால் பொங்கி வரும். அப்போது
“பொங்கலோ பொங்கல்”
என்று அப்பா உரத்த குரலில் சொல்ல, நாங்களும் அதை திரும்ப திரும்ப சொல்வோம். அம்மாவும்
அப்பாவுமாக இரு கைகாளிலும் அரிசியை அள்ளி பானையில் இடுவர். ஒரு பானையில் சர்க்கரை
பொங்கலும்,
ஒரு பானையில் வெண் பொங்கலும் வேகும்.
அறுவடைக்கு முன்பு விளைந்திருக்கும் வயலின் சனி
மூலையில் கொஞ்சம் கதிர் அறுத்து (புதிர் என்பார்கள்), அதை கசக்கி, நெல்மணிகளை காயவைத்து அதை உரலில் போட்டு
குத்தி,
அரிசி வேறு உமி வேறாக பிரித்து எடுத்து, அந்த அரிசியைதான், அதாவது வெள்ளாமையில் விளைந்த முதல் அரிசியை, பொங்க வைக்க பயன்படுத்துவார்கள்
பொங்கல் வேகும் போது, அடி பிடிக்காமல் இருக்க புதிய அகப்பையை வைத்து
கிண்டி விடுவார்கள். எங்க அப்பா, பிரத்யோகமாக ஒரு சிறு அழுத்தமான கம்பை சீவி
வைத்திருப்பார். அதை எடுத்து அவர் லாவகமாக கிண்டுவார். ஈரத்துணியோடு அப்பா
கிண்டுவதும்,
நெருப்பு அனல் வியர்வையில் நனைக்கிற காட்சியும் என் மனதில் விரிகிறது. என் அப்பா
இறந்து முப்பத்தி ஐந்து ஆண்டுகள் தாண்டினாலும் இந்த பொங்கல் அவரது ஞாபகங்களை
நினைவுக்கு கொண்டு வருவதை தவிர்க்க முடியவில்லை.
பொங்கல் வெந்த பிறகு அதை இறக்கி சாணி
பிள்ளையார் சாமிக்கு முன்பு புதிய பிரிமனையில் வைப்பார்கள். புதிய சட்டியில்
கர்ணகிளங்கு கூட்டு தயாரிப்பார்கள். பிறகு தலை வாழை இலை விரித்து அதன் மீது இரு
பொங்கலையும்,
கூட்டும்,
விளைந்த கரும்பு,
பச்சை காய்களையும்,
கனிகளையும்,
வைத்து வணங்குவார்கள். பிறகு வெளியே எடுத்து வந்து சூரியனுக்கு காட்டி
வழிபடுவார்கள்.
விவசாய தொழில் செழிக்க, நல்ல மழையையும், பயிர் ஊட்டத்துடன் வளர நல்ல வெயிலையும் கொடுத்து
உதவிய சூரியனுக்கு முதலில் பொங்கலை வைத்து படைத்து, நன்றி தெரிவித்து வணங்குவார்கள். அதனால்தான்
பொங்கல் நன்றி தெரிவிக்கும் விழா என்று சொல்கிறேன்.
எங்கள் வீட்டில் வீட்டுக்குள் கோடு வெட்டி, பொங்கல் வைத்தது போல சிலரது வீட்டில் செங்கல்
அடுப்பு வைத்தும் பொங்கலிடுவார்கள். சிலரது வீட்டில் வாசல் முற்றத்தில் வைத்தும்
கொண்டாடுவார்கள். சிலர் வீட்டு அடுப்பிலும் பொங்கல் வைப்பார்கள்
பொங்கலுக்கு புது உடையும், வீட்டில் மகிழ்ச்சியும் நிரம்பி இருக்கும்.
அன்றைக்கு அவச் சொல் பேச மாட்டார்கள். எதற்கெடுத்தாலும் ஒப்புராண என்று வார்த்தையை
உபயோகிப்பவர்களும்,
பானையில் அரிசி அள்ளிபோடும் போது தும்முகிறவர்களும் வசவுக்கு ஆளாவார்கள்.
பொங்கல் பானை இறக்கி சாமி முன் வைத்து கும்பிடும்
வரை பெண்கள் பய உணர்வோடே இருப்பார்கள். சில வீட்டில் பால் பொங்காது. சில சமயம் பானை
உடைந்து விடும், குறித்த
நேரத்திற்குள் வேகாது. இப்படி ஏடா கூடமாக நடந்தால், அடுத்த ஆண்டு அவர்கள் வீட்டில் பொங்கல் நடக்காது
என்பது அறிகுறியாம்.
இறந்தவர்கள் குடும்பம், அவர்களது பங்காளி வகையறா அந்த வருடம் பொங்கல் கொண்டாட
மாட்டார்கள். அதனால் ஒவ்வொருவர் வீட்டில் இருந்தும் அவர்கள் வீட்டுக்கு பொங்கல் கொண்டு
சென்று கொடுப்பார்கள்
தை பிறந்தால்தான் வழி பிறக்கும் என்று, அந்த வருடம் அறுவடையை வைத்தே அவர்களின் இல்ல காதுகுத்து, கல்யாணம் போன்ற விழாக்கள் முடிவு
செய்யப்படுகிறது. அதனால் தான் தை முதல் நாளை வரவேற்கும் விதமாகவும் பொங்கல்
திருநாள் அமைகிறது. நன்றியும் எதிர்ப்பார்ப்பும் உள்ள இந்த மாத பிறப்பை அவ சொல்
பேசி வரவேற்க கூடாது என்பதால் நல்ல வார்த்தைகளையே பேசுவார்கள்.
சொல்வாக்கு நல்வாக்காக இருந்தால் செல்வாக்கு தானே
கூடும் என்பார்கள்.
மாட்டுப் பொங்கல்
பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
முதல் நாள் எப்படி தன்னை வாழ வைக்கும் இயற்கைக்கு... சூரியனுக்கு நன்றி தெரிவித்து
பொங்கல் வைத்து விழா கொண்டாடியது போல, தனது விவசாய வேலைக்கு உதவியாக இருக்கும் காளைகளுக்கும், பசி ஆர பால் கொடுக்கும் பசுக்களுக்கும், நன்றி தெரிவிக்கும் விழா.
வீட்டு பெண்கள் அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து
குளித்து முடித்து,
மாடு கட்டும் கொட்டகை,
வெளிப்புற பகுதி எங்கும் சாணி கரைத்து தெளித்து கூட்டி சுத்தம் செய்வார்கள். ஒரு இடத்தில்
சானியால் மொழுகி, அங்கு
சானத்தால் பிள்ளையார் பிடித்து, ஒரு செங்கல் மீது கிழக்கு பார்த்து வைப்பார்கள். அதனருக்கே
வயலில் இருந்து சேத்தோடு கொத்தாக பிடுங்கி வந்த நெற்கதிரை நட்டமாக நிற்க
வைப்பார்கள். அருகில் கண்ணுபூலை, நெல்லிக் கொத்து, மாங்கொத்து, புங்கைளை, வேப்பிலை அருகம் புல், போன்றவைகளை சொருகி வைத்திருப்பார்கள்.
சானி பிள்ளையார் எதிரே, சானியால் கள்ளிவட்டம் போடுவார்கள். அது நான்கு
கட்டமாக இருக்கும். அந்த கள்ளிவட்டத்தை சுற்றிலும் செவந்தி பூக்களால் ஜோடித்து, அந்த பூக்களில் குங்கும போட்டு வைப்பார்கள்.
மஞ்சளை தண்ணீரில் கரைத்து அதோடு சுண்ணாம்பும் சேர்த்து கரைத்து சிவப்பான அந்த
ஆரத்தியை அந்த நான்கு கட்டத்திலும், அதாவது பெட்டியிலும் ஊற்றுவார்கள்.
கள்ளிவட்டம் அருகில் கலர் காலராக கோலம் போடுவார்கள், கள்ளிவட்டத்தை ஆடு, மாடு மிதிக்காமல், கோழிகள் கிளறாமல் இருக்க ஒரு பெரிய கூடை, அல்லது பஞ்சாரம் கொண்டு முடி வைப்பார்கள். இதெல்லாம்
பொழுது விடியும் முன்னே நடந்து விடும்.
ஆண்கள், காலையிலேயே ஆடு மாடுகளை ஒட்டிச்சென்று பகல்
முழுவதும் மேய்த்து,
கொம்புகளை சீவி,
மதியம் நன்கு குளியாட்டி அழைத்து வருவார்கள். கொட்டகைக்கு எதிரே உள்ள இடத்தில்
மாடுகளை வரிசையாக கட்டி,
கொம்பு சீவிய இடத்தில் வண்ணம் தீட்டுவார்கள்.
திமுக கட்சிகாரர்கள் தங்கள் மாடு கொம்புக்கு
கருப்பு,
சிவப்பு வண்ணம் தீட்டுவார்கள். அதே போல காங்கிரஸ், அதிமுக கட்சி போன்றவர்கள் அவர்களின் கட்சி
கொடியின் நிறத்தை வண்ணமாக தீட்டுவார்கள். புதிதாக வாங்கிய குஞ்சம், அல்லது, சலங்கையை மாடு கழுத்தில் கட்டுவார்கள். அதே
போல புதிய மூக்கணங்கயிறு கட்டுவார்கள்.
அதன் பிறகு மாலை நான்கு மணிக்கு, அதாவது நல்ல நேரம் பார்த்து, வீட்டு தெய்வத்துக்கு முன்பு
வைக்கப்பட்டிருக்கும் மாட்டுக்காக செய்த பொங்கல், மற்றும் நெட்டி மாலை போன்ற பொருட்களை எடுத்து
வந்து, அந்த
கள்ளிவட்டத்துக்கு முன்பு வைப்பார்கள். அங்கு சாம்பிராணி காட்டி, கற்பூரம் ஆராத்தி எடுத்து தரிசனம்
செய்வார்கள்.
பிறகு நெட்டி மாலை, தேங்காய் மாலை, ரொட்டி அடை மாலை, கரும்புதுண்டு மாலை போன்றவற்றை மாடுகளின்
கழுத்தில் கட்டுவார்கள். பொங்கலை எடுத்து வந்து மாடுகளுக்கு ஊட்டிவிடுவார்கள். அதேபோல
பழங்கள் கொடுப்பார்கள்.
அடுத்து குடும்பத்தின் தலைவன் ஒரு கையில்
நெருப்பு சட்டி ஏந்தி அதில் சம்பிராணி கொட்டி, புகையை மாட்டுப் பக்கம் அனுப்புமாறு செய்தபடி
ஒட்டமும்,
நடையுமாக நடக்க,
அவர் பின்னால் இன்னொருவர் மஞ்சள் தண்ணீர் கலந்த சட்டியை கைகளில் வைத்து ஒரு இலை
கொத்தை,
அதில் நனைத்து மாட்டு பக்கம் தெளித்தபடி செல்ல, பின்னால் வருபவர்கள் தாம்பாள தட்டு, மற்றும் தகர டின்களில் கம்பால் அடித்து ஓசை எழுப்பியபடி
“பொங்கலோ பொங்கல்” என்று சத்தம் போட்டபடி வருவார்கள். சாம்பிராணி புகையும், மஞ்சள் தண்ணீரும் கடவுளுக்கு காட்டுவது போல
இருக்கும். மூன்று முறை சுற்றி வந்து, முடிவில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மாடுகளின் முன்பு
கும்பிட்டு நமஸ்கரிப்பார்கள்.
பிறகு மாடுகளை அவிழ்த்து சென்று கொட்டகையில்
கட்டுவார்கள். கொட்டகைக்கு செல்லும் பாதையில் வைக்கோல் போட்டு கொளுத்தி, அதனருகே உலக்கை போட்டு மறித்து, நெருப்பில் மாடுகளை தாண்டி செல்லும் படி
அழைத்து செல்வார்கள்.
இது முடிந்ததும் ஆண்கள் வீட்டுக்கு வாசலில் வந்து
நிற்க, பெண்கள் ஆராத்தி எடுத்து
உள்ளே அழைப்பார்கள். வீட்டுக்குள் சென்று குடும்ப தெய்வத்தை வணங்கிவிட்டு, பிறகு பெற்றோரின் கால்களில் விழுந்து
நமஸ்காரம் செய்வார்கள். அவர்கள் இவர்களை ஆசீர்வதித்து, விபூதி பூசி விடுவார்கள்.
அதே போல உறவினர்கள், தெருவில் உள்ள அனைவரது வீட்டிலும் பெரியவர்கள்
அனைவரின் கால்களிலும் விழுந்து வயது குறைந்தவர்கள் ஆசீர்வாதம் வாங்குவார்கள். சிறு
வயது பையன்,
பெண்ணுக்கு நல்லா படிக்கணும் என்றும், கல்யாண வயது பெண்ணுக்கும், ஆணுக்கும் அடுத்த ஆண்டு கல்யாணமாகி இரண்டு பேராக
வரவேண்டும் என்றும்,
கல்யாணமான ஜோடிகளுக்கு அடுத்த ஆண்டு குழந்தையோடு வந்து வாழ்த்து பெற வேண்டும் என்றும், பெரியவர்களுக்கு உடல் நலத்தோடு இருக்க வேண்டும்
என்றும் ஆசீர்வதிப்பார்க்கள்.
அனைவரும் கும்பல் கும்பலாக சென்று வணங்கிய அந்த
நாட்களை நினைத்தால் திருவிழா மாதிரி தெரிகிறது. மாலை ஆறு மணி முதல், இரவு பத்து மணிவரை தெருவெங்கும் ஜனங்கள் சென்று
கொண்டும், வந்து
கொண்டும் இருப்பார்கள். என் தந்தை இறப்புக்கு பிறகு, அவர் அமர்ந்திருந்த நாற்காலிக்கு ஆசீர்வாதம் பெற்று
சென்றவர்களை கூட நான் பார்த்திருக்கிறேன். அவ்வளவு மரியாதைக்குரியவர்கள்.
பயிறில் ஆடு மாடு மேய்ந்த பிரச்சனை, வேலி தாகராறு போன்ற சில முரண்பட்ட காரணங்களால் பேசிக் கொள்ளாமல் இருப்பவர்கள், அங்காளி, பங்காளி பகையாளி என பேசாமல் இருப்பவர்கள் அனைவரும் நமஸ்காரம் பெருவதின்
மூலம், ஆசீர்வாதம் வாங்குவதின்
மூலம் பிரச்சனைகளை சுமுகமாக்கிவிடும் இந்தப் பொங்கல்.
முன்பெல்லாம் அவர்களாகவே தயாரித்த விபூதியை சுரைக்காய்
குடுக்கையில் வைத்திருந்து, அன்று பூசிவிடுவார்கள். அதே போல ஒவ்வொருவர் வீட்டிலும் பழங்கள், திண்பண்டங்கள் கொடுத்து உற்சாகப் படுத்துவார்கள்.
எங்க வீட்டில் அடை,
அதாங்க ரொட்டி, பச்சைபயிறு
பாயாசம் கொடுத்து வரவேற்பதுண்டு. என்னதான் மாடுக்கு பொங்கல் வைத்து கும்பிட்டாலும், வீட்டு தெய்வத்துக்கு வடை பாயாசத்தோடு படையல் நடக்கும்.
உழைப்பிற்கு
உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும்
மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் பொங்கல்
விழா, மறக்க முடியாத பண்டிகைதான்.
ஒரு மாட்டுப் பொங்கல் அன்று, எனது சித்தப்பா மகன் முருகேசன், மாடு தாண்டிய நெருப்பில் கால் இடறி விழுந்துவிட்டான்.
அவனை தூக்கி காப்பாறியவர் நெருப்பு பட்ட இடத்தை துடைக்க, தோல் உரிந்து விட்டது. வலியால் கத்தினான். வாழை
மர பட்டைகளை கொண்டுவந்து பிழிந்து அவன் முதுகில் ஊற்றினார்கள். அவனை மருத்துவமனைக்கு
கொண்டு சென்ற நிகழ்வெல்லாம் மறக்க முடியாத மாட்டுப் பொங்கல்.
கன்னி பொங்கல்? காணும் பொங்கல்?
மழைக்குரிய தெய்வம்தான் இந்திரன். எனவே இந்திரனை
வழிபட்டால், மாதம்
மும்மாரி பெய்து பயிர் வகைகள் செழிக்கும் என கன்னிப் பெண்கள் எல்லாம் சேர்ந்து நன்றி
தெரிவித்து கொண்டாடுகிற ஒரு வழக்கம் முன்பு இருந்ததாக சொல்வார்கள்.
அதே போல பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள்கொத்தினை
கட்டி அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை
கல்லில் இழைத்து பாதத்தில் முகத்தில் பூசிக்கொள்வார்கள் என்கின்றனர்.
உடன்பிறந்த சகோதரர்களுக்காக பெண்கள் செய்யும் நோன்பு
இது என்றும் உடன்பிறந்த சகோதரர்கள் நலமும் வளமுமாய் வாழ சகோதரிகள் பிரார்த்திக்கும்
நாள் என்றும் கன்னிப் .பொங்கலை கூறுவார்கள்.
ஆனால், மாடு மேய்ப்பவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வசூல்
செய்து, அந்த
பணத்தில் மந்தையில் மாடுகளுக்கு பொங்கல் கொண்டாடி மகிழ்வார்கள். எல்லா மாடுகளையும்
ஒன்றாக திரட்டி தெருவுக்குள் ஒட்டி வருவார்கள்.
மாடுகளுக்கு முன்பு பறையடித்து வருவார்கள். அதன் பின்னே மாடுகள் திரண்டு வரும். வழியில்
குறுக்காக வைக்கோல் போட்டு நெருப்பு வைப்பார்கள். மாடுகள் நெருப்புகளை தாண்டி திபு
திபு என வருகிற காட்சி கண் கொள்ளா காட்சியாக இருக்கும். இதனை நான் பார்த்திருக்கிறேன்.
ஆனால், சென்னையில் காணும் பொங்கல் கொண்டாடப் படுகிறது.
அன்று கடற்கரையில் குவியும் கூட்டத்தை பார்த்து அசந்து போயிருக்கிறேன். கூட்டம் கூட்டமாக
வண்டி கட்டிக் கொண்டு வருவார்கள். ஒருவரை ஒருவர் அங்கு கண்டு கொண்டு நலம் விசாரிப்பதால்
காணும் பொங்கல் என்கின்றனர்.
-
ஜி.பாலன், வடசங்கந்தி