என் தாய் மீது நான் நிறைய அன்பு வைத்திருந்தாலும் அவர் சொல்வதை நான் கேட்பதில்லை , மதிப்பதில்லை என்ற ஒரு வருத்தம் என் தாய்க்கு உண்டு. அது எனக்கு நன்றாகவே தெரியும். அது ஒரு
கருத்து முரண்பாடு.
கருத்து முரண்பாடு.
தாய் பக்தி மிகுந்தவர். அவரிடம் அருள் பெறவும் ஆசிர்வாதம் பெறவும் எங்களில் பலர் இருக்கிறார்கள். அவர் மீது குலதெய்வம் கடவுள் இறங்கி ஆசிர்வதிப்பதாக நினைத்து அவரிடம் வருவார்கள். அவர் மீது சாமி வரவழைத்து என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனையும் கேட்பார்கள். அவர் கூறும் தைரியமும் ஆலோசனையையும் கேட்டு அதன் படி நடந்துகொண்டிருக்கிறார்கள்.
எனக்கு இந்த பக்தியில் உடன்பாடில்லை. அதே போல எனக்குள் உள்ள கருத்தை நான் யாரிடமும் திணித்தில்லை. அதே போல அதிகமாக மனம் புண்படும் படி விமர்சித்ததும் இல்லை.
நான் திரைப்படத்துறையில் என்னை ஈடுபடுத்திக்கொண்டிருந்த போது போதிய வருமானம் இல்லாததால் இதில் வெற்றியடைந்த பிறகு வீட்டுக்கு தொடர்புகொள்ள வேண்டும் என உறுதியாக இருந்தேன். இதனால் கடித தொடர்பு எதுவும் வைத்துக்கொள்ளவில்லை. அந்த காலகட்டத்தில் என்னை தேடி எங்கள் குலதெய்வத்தை நாடி என் அன்னை பல முறை வேண்டியிருக்கிறார். என் மகனை என்னிடம் கொண்டு வந்து சேர்த்துவிடு. அவன் மனதை ஊரு பக்கமாக திருப்பிவிடு என அவரது பல கோரிக்கைகளையும் வேண்டுதல்களையும் முறையிட்டிருக்கிறார்.
நான் திரைப்படத்துறையில் மக்கள் தொடர்பாளர் ஆனதும் ஊருக்கு சென்றேன். அதன் பிறகு திருமணம் நடந்தது. இதோ கால ஓட்டத்தில் வாழ்க்கையை மகிழ்ச்சியாக நடத்திக்கொண்டிருக்கிறேன். இருந்தாலும் சில முயற்சிகள் தோல்வியடைவதும், அதனால் ஏற்பட்ட நஷ்டமும் எங்களை கஷ்டப்படுத்திய போது அதனால் எனக்கும் என் மனைவிக்கும் சின்ன வருத்தங்கள் வரும். அதை நானே இறங்கி சென்று சமாதானப் படுத்திக் கொள்வேன்
.
.
ஆனால் அப்போது மனம் உடைந்திருக்கும் போது அது நான் கடவுளை மதிக்காத காரணம் என்று என் அன்னை நினைப்பார். அவர் பல முறை சொல்லியும் குலதெய்வம் கோவிலுக்கு செல்ல வில்லை என்று ஒரு வருத்தம் அவரிடம் இருக்கிறது. அதே போல அவரது வேண்டுதல்களை நான் நிறைவேற்றவில்லை என்ற வருத்தமும் அவருக்கு இருக்கிறது. அதனால்தான் நான் இப்படி கஷ்டப்படுவதாக அவர் நினைத்து வருந்துவார்.
அன்று மனம் ஒரு வேதனையில் இருந்தது அப்போது எனது தாய் என்னிடம் வந்து ஏன் இப்படி இருக்கிறாய். மனதில் போட்டு கண்டதையும் குழப்பிக்கொள்ளாதே என்றார். அப்போது என் தாயை கூர்ந்து கவனித்தேன். அதில் அவர் என் மீது வைத்திருக்கும் அளவு கடந்த பாசமும் கருணையும் தெரிந்தது. எனக்காக என்தாய் கவலைகொண்டிருக்கிறார் என்பது தெரிந்தது.
அம்மா அருகில் வந்து பார்த்து என்னிடம் நான் நிம்மதியில்லாமல் இருக்கிறேன். நீ எனக்காக அங்கு சென்று வரணும் என் வேண்டுவது போல கேட்டார். என் பேச்சை மதிக்காதவன், ஆலோசனை சொல்லக் கூட தகுதியில்லாதவளாயிட்டோமோ என்று அவர் வருந்துகின்ற அளவுக்கு இருக்கிறோமே என்று என் மனதுக்கு பட்டது.
எனக்கென்று கொள்கைகள் இருக்கிறது. அதிலிருந்து நான் மாறுவதில்லை. ஆனால் ஒரு அன்னையிடம் எவ்வளவு நாளைக்கு உலகம் தோன்றிய வரலாற்றை சொல்லிக்கொண்டிருப்பது. அவர் மனம் ஆறுதல் அடைய அவர் பேச்சை காது கொடுத்து கேட்டு அவர் உள்ளம் மகிழ்ச்சியடைய வேண்டும். அவருக்காக சென்று வரலாமே என்று மனதிற்குள் ஒரு எண்ணம். அது பக்தியால் அல்ல. ஆனால் தாயின் பாசத்தால் வந்த உணர்வு. அதனால் என் குலதெய்வம் கோவிலுக்கு சென்று வர சம்மதித்தேன்.
அதற்காக நாட்களை தள்ளிப்போட விரும்பவில்லை. மனைவியை அழைத்துக்கொண்டு அந்த வாரமே திடீர் என்று புறப்பட்டேன். சென்னையிலிருந்து எனது சொந்த ஊரான வடசங்கந்தி சென்றேன். பிறகு அங்கிருந்து திருத்துறைப்பூண்டி சென்று அங்கிருந்து வேதாரண்யம் செல்லும் பேருந்தில் ஏறினோம். வாய்மேடு என்ற கிராமத்தில் இறங்கி அங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில உள்ள தகட்டூர் என்ற கிராமத்துக்கு சென்றோம்.
அங்குதான் குலதெய்வம் கோவில் இருக்கிறது. அவர் பெயர் பைரவர். கோவிலில் நான் சந்தித்த அந்த பெரியவரை பார்த்ததும் பழைய நினைவுகள் ஞாபகத்திற்கு வந்தது. அவர் எனது தந்தை கோபாலகிருண்ணன் இருக்கும் போது எனது கிராமத்திற்கு வருவார். அவருக்காக எனது தந்தை ஆட்களை வைத்து இளநீர் வெட்டி கொடுத்து உபசரித்ததையும், அவருக்கு செலவுக்கு பணம் கொடுத்ததையும் பார்த்திருக்கிறேன்.
அவர் எண்ணைப் பார்த்தார். நான் அவரை பார்த்து வழக்கமாக வைக்கும் ஒரு வணக்கத்தை வைத்தேன். பதிலுக்கு அவர் ஆசிர்வதித்து திருநீறை கொடுத்தார். நான் சென்னையில் இருந்து வந்திருப்பதை அவரிடம் சொன்னேன். அவரும் சென்னை வந்திப்பதாகவும் எங்கே வசிக்கிறீர்கள் என்றும் கேட்டார். நான் சூளைமேடு பகுதியில் வசிப்பதை சொன்னேன். நான் அங்குதான் வந்தேன். அங்கு கலெக்டர் செல்வராஜ் வீடு இருக்கிறது என்றார்.
அதற்கு நான் அந்த தெருவுக்கு பக்கத்து தெருவில்தான் என் வீடு இருக்கிறது. அவர் என் உறவுக்காரர் என்று சொன்னேன். அதை கேட்ட அவர் அந்த தெருவில் வடசங்கந்தி கோபாலகிருஷ்ணன் மகன் நடு பையன் அங்கேதான் இருக்கிறார். அவரை பார்க்கனும் என்று நினைத்து வருவேன். எனக்கு நேரம் சரியாக அமையாததால் வந்துவிடுவேன் என்று பதில் சென்னார். எனக்கு அந்த பதிலை கேட்டதும உற்சாகம் கூடிவிட்டது.
அவரிடம் நான் தான் கோபாலகிஷ்ணன் மகன் என்று சொன்னேன். அவர் என்னை வியப்போடு பார்த்தார்.நான் சென்னையில் இருந்த காலத்தில் என் தாய் எனக்காக தகட்டூர் பைரவர் கோவிலுக்கு அடிக்கடி சென்று கடவுளை வேண்டியிருக்கிறார். அந்த சம்பவங்களை சொன்னார். ஊருக்கு திரும்பிய நீங்கள் ஏன் இங்கு வரவே இல்லை. கல்யாணம் செய்துகொண்டு சென்னையிலேயே செட்டில் ஆனதாக சொன்னார்கள். ஏன் கோவிலுக்கு வர வில்லை என்று கேட்டார்.
நான் பதில் சொல்லாமல் வேறு பேச்சுக்கு திரும்பிய போது அவர் புரிந்துகொண்டார். இருப்பினும் அப்போது அங்கு நானே சென்றிருப்பதால் என் தந்தையை பற்றிய பழைய .நினைவுகளை பகிர்ந்துகொண்டார். அவ்வளவு பிஸியிலும் அவரிடம் நான் சிறிது நேரம் பேசிக்கொண்டு குலதெய்வம் கோவிலையும் அதன் சொத்துக்களையும் சவுக்கு காடுகயையும் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். அதன் பிறகு பைரவர் பற்றி பேச ஆரம்பித்தார். அவரிடமிருந்து தெரிந்துகொண்டவைகள் கீழே படிக்கவும்.
அங்கு பைரவர்தான் மூலவராக இருந்து அருள் பலிக்கிறார். உற்சவராக சட்டைநாதர். 500- 1000 வருடங்களுக்கு முன் உள்ள பழமைவாய்ந்த இடம். காலை ஆறு மணி முதல் பதினோரு மணிவரை, மாலை நாலு மணி முதல் எட்டு மணிவரை திறந்திருக்கும்.
சித்ராபவுர்ணமியை ஒட்டி பத்துநாள் விழா நடக்கிறது. ஞாயிறு ராகுகாலமான மாலை 4.30-6 மணி, தேய்பிறை அஷ்டமி, கார்த்திகையில் பைரவாஷ்டமி காலங்களில் சிறப்பு பூஜை நடக்கிறது. மனோபலம், வியாதி நிவர்த்தி, நியாயமாக நினைப்பவை நிறைவேற தேய்பிறை அஷ்டமியன்று மாலை 5-8மணிக்குள் யாகம் நடத்தப்படுகிறது. திங்கள், வெள்ளிக்கிழமைகளில் விசேஷ பூஜை நடத்தப்படுகிறது.
அனுமனுடன் வந்த பைரவர் என்பதால், இத்தலத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி ஆகியோரும், பிரகாரத்தில் கணபதி, வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர், துர்க்கை, சண்டிகேஸ்வரர் ஆகியோரும் உள்ளனர். கோயிலுக்கு எதிரேயுள்ள தீர்த்தக்குளம் உள்ளது. குளத்தின் ஒரு கரையில் காத்தாயி, கருப்பாயி சமேத ராவுத்தர் சன்னதி இருக்கிறது. இவரும் இத்தலத்தில் காவல் தெய்வமாக இருக்கிறார்.
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். சுவாமி அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
தலபெருமை:
இந்த கோயிலில் பைரவர் மூலஸ்தானத்தில் இருந்து அருள்பாலிக்கிறார். இவரை மூலஸ்தானத்தில் கொண்ட கோயில் தமிழகத்தில் இதுமட்டுமே.
பைரவர் பிறப்பு:
அபிதான சிந்தாமணி என்ற நூலில் பைரவர் பிறப்பு பற்றி கூறப்பட்டுள்ளது. தாருகாசுரன் என்பவன் இறவா வரம் வேண்டும் என சிவனிடம் வரம் கேட்டான். உயிருக்கு இறப்புண்டு என்ற சிவன், ஏதோ ஒரு பொருளால் இறப்பை வேண்டும்படி அவனிடம் சொன்னார். அவன் அகங்காரத்துடன், ஒரு பெண்ணைத் தவிர தன்னை யாரும் அழிக்கக் கூடாது என்று வரம் பெற்றான். பலம் மிக்க தன்னை ஒரு பெண் என்ன செய்துவிட முடியும் என்பது அவனது எண்ணம். பல அட்டூழியங்கள் செய்த அவன் அழியும் காலம் வந்தது. தேவர்கள் சிவனிடம் முறையிட் டனர். உடனே, பார்வதிதேவி சிவன் விழுங்கிய ஆலகால விஷத்தின் கறை படிந்த ஒரு சுடரை உருவாக்கினாள். அந்தச் சுடர் ஒரு பெண்ணாக வடிவெடுத்தது. "காளம்' என்ற விஷம்படிந்த அந்த பெண்ணுக்கு "காளி' என பெயர் சூட்டினாள் பார்வதி. காளிதேவி கடும் கோபத் துடன் தாருகாசுரன் இருக்கும் திசைநோக்கி திரும்பினாள். அந்த கோபம் கனலாக வடிவெடுத்து, சூரனை சுட்டெரித்தது. பின்னர் அந்தக் கனலை காளிதேவி ஒரு குழந்தையாக மாற்றி அதற்கு பாலூட்டினாள். அதன்பிறகு சிவபெருமான் காளியையும், அந்தக் குழந்தையையும் தன் உடலுக்குள் புகச்செய்தார். அப்போது அவரது உடலில் இருந்து காளியால் உருவாக்கப்பட்டது போல, எட்டு குழந்தைகள் உருவாயின. அந்த எட்டையும் ஒன்றாக்கிய சிவன் குழந்தைக்கு "பைரவர்' என்று பெயர் வைத்தார்.
நாய் வாகனம்:
தெய்வங்களுக்கு காளை, சிங்கம், யானை, மயில் போன்ற வாகனங்கள் இருக்க, பைரவருக்கு மட்டும் நாய் வாகனம் தரப்பட்டுள்ளது. சிலர் நாயை பஞ்சுமெத்தையில் படுக்க வைத்து, பிஸ்கட் கொடுத்து, குழந்தை போல வளர்ப்பார்கள். சிலர் நாயை தெருவில் கண்டாலே கல்லெறிவார்கள். இதுபோல், வாழ்க்கையில் வரும் துன்பத்தையும், இன்பத்தையும் இறைவனிடம் அர்ப்பணிக்க வேண்டும் என்றே வேதங்கள் சொல்கின்றன. அந்த வேதத்தின் வடிவமாகவே நாய் வாகனம் கருதப் படுகிறது. நாய்க்கு "வேதஞாளி' என்ற பெயரும் இருப்பது குறிப்பிட தக்கது.
பெயர்க்காரணம்:
இவ்வூருக்கு "யந்திரபுரி' என்ற பெயரும் இருக்கிறது. இதன் தமிழ்ப்பெயரே "தகட்டூர்'. சக்தி வாய்ந்த தெய்வங்களின் முன்பு ஸ்ரீசக்ரம் என்ற அமைப்பு உருவாக்கப்படும். இந்தக் கோயிலிலும் ஒரு யந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. உற்சவர் சட்டைநாதர் சிலையும் இருக்கிறது.
தல வரலாறு:
இலங்கையில் ராவணவதம் முடிந்ததும் பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக ராமேஸ்வரத்தில் ராமபிரான் சிவபூஜை செய்ய முடிவெடுத்தார். அதற்காக லிங்கம் எடுத்து வர ஆஞ்சநேயரை காசிக்கு அனுப்பினார். அனுமான் லிங்கத் துடன் வரும்போது, அவருடன் மகாபைரவரும் வந்தார். கோயில்களில் பைரவரே காவல் தெய்வம். அக்காலத்தில், கோயிலைப் பூட்டி பைரவர் சன்னதியில் சாவியை வைத்து விட்டு சென்று விடுவார்கள். அதை தொட்டவர்களின் வாழ்வு முடிந்து போகும். அந்தளவுக்கு சக்திவாய்ந்தவராக பைரவர் கருதப் பட்டார். அதுபோல் காசி லிங்கத்திற்கு காவலாக பைரவர் அனுமனுடன் வந்துள்ளார். அவருக்கு தற்போதைய தகட்டூர் தலத்தில் குடியிருக்க ஆசைபிறக்கவே, அங்கேயே தங்கி விட்டார்.
இவற்றையெல்லாம் கேட்டு அதன் குறிப்புகளையும் பெற்றுக்கொண்டு அவரிடம் விடை பெற்று கோவிலை சுற்றி வந்தேன். என் மனைவி பக்தியோடு வணங்கி மனமுருக வேண்டி நெகிழ்ந்து போயிருந்தாள்.
நான் அங்கிருந்து புறப்படும் போது எனது தந்தையும், அவரது தந்தையும், அவரது தந்தையும் என பல தாத்தாக்கள் அங்கு வந்து வணங்கி சென்ற ஞாபகம் வந்தது. வாழையடி வாழையாக எனது குலங்கள் வந்து சென்ற இடத்துக்கு நானும் சென்று திரும்பியிருக்கிறேன்.
இப்போதைக்கு என் தாய் மனநிம்மதி அடைந்திருக்கிறார்.
படங்கள்: தினமலர் டாட்காம்
No comments:
Post a Comment